சிட்னி: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரு நாடுகளுக்கு இடையிலான குடியேற்ற ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
இருதரப்பு பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சிட்னி நகரில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசைச் சந்தித்தப்போது குடியேற்ற ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையே மாணவர்கள், பட்டதாரிகள், கல்வி ஆய்வாளர்கள் மற்றும் வர்த்தக மக்கள் நடமாட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் இரு தரப்பு குடியேற்ற ஒப்பந்தம் வகுக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் வட்டாரப் பாதுகாப்பு, அதிகரித்து வரும் பதற்றம் குறித்தும் விவாதித்தனர்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.
கடந்த வாரம் சிட்னியில் இந்த அமைப்பின் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடன் உச்ச வரம்பு பிரச்சினை காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசரமாக நாடு திரும்பிவிட்டார்.
இருந்தாலும் இந்தியப் பிரதமர் மோடி சிட்னி சென்று ஆஸ் ரேலியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு திரு மோடி மேற்கொண்ட முதல் பயணம் இது. இரு மாதங்களுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் பிரதமர் அல்பனிஸ் இந்தியாவுக்கு வருகையளித்தார்.
குடியேற்ற ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
2016ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட கால் பகுதிவாசியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக் கிறது.
இறுதி செய்யப்பட்ட குடியேற்ற ஒப்பந்தத்தின் கீழ் 'மேட்ஸ்' (Mates-Mobility Arrangement for Talented Early Professionals Scheme) எனும் திட்டம் செயல் படுத்தப்படும். இது, இந்தியாவுக் காக உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும்.
இதற்கிடையே பத்து அணிகள் பங்கேற்கும் 13வது 50 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கு திரு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

