வாஷிங்டன்: சமூக ஊடகங்கள் இளையர்களை, குறிப்பாக பருவ வயது பெண்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று அமெரிக்காவின் உயர்மட்ட அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மூளை வளர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் குழந்தைகளை தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார் அவர். அமெரிக்க சர்ஜன் ஜெனரலான விவேக் மூர்த்தி. சமூக ஊடகங்களால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் குழந்தை களின் நலன்களைப் பாதிக்கும் அம்சங்களும் இருக்கின்றன," என்றார்.
"நமது இளையர்களின் மனநிலையைப் பாதிக்கும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கிறோம். சமூக ஊடகங்கள் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இது, உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரம்," என்று தனது ஆலோசனைக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் பயன் பாட்டால் உடல் உருவப் பிரச்சி னைகள் ஏற்படலாம், உணவு உண்ணும் முறையைப் பாதிக்கலாம். நல்ல தூக்கத்தைக் கெடுக்கலாம்.
சமூகத்துடன் ஒப்பிடுவது மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கலாம் என்று இளம் பருவத்தினரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி ஆலோசனை கூறுகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் செலவிடும் இளம் பருவத்தினருக்கு மன அழுத்தம், பதற்றம் போன்ற மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது.
பெரும்பாலான இளம் பருவத்தினர், சமூக ஊடகங்கள் சிரமமான சூழ்நிலையில் ஆதரவாக இருப்பதாகவும் நண்பர்களுடன் இணைந்திருக்கவும் புத்தாக்கத்திற்கு உதவுகிறது என்று கூறுகின்றனர். இந்த நன்மைகளை எல்லா வயதினருக்கும் கொண்டு செல்லும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை கொள்கை வகுப்பாளர்கள் மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வலியுறுத்தியது.

