குழந்தை அடம்பிடித்ததால் விமானத்திலிருந்து வெளியேற்றப்படவிருந்த குடும்பம்

குழந்தை அடம்பிடித்ததால் விமானத்திலிருந்து வெளியேற்றப்படவிருந்த குடும்பம்

1 mins read
43974f3b-c98c-4ee3-a2ad-71440f3ce1aa
மைஏர்லைன் பயணிகள் விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. படம்: மைஏர்லைன் -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் லாங்காவியிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் மேற்கொண்ட விமானத்திலிருந்து ஒரு குடும்பம் வெளியேற்றப்படவிருந்தது.

விமானம் பறக்க ஆரம்பிக்கத் தயாரானபோது அக்குடும்பத்தின் இரண்டு வயது குழுந்தை இடைவாருடன் பாதுகாப்பான முறையில் இருக்கையில் அமர்த்தப்படவில்லை.

அதைத் தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் குடும்பம் விமானத்திலிருந்து வெளியேற்றப்படும் என்று விமானி அறிவிக்கவேண்டியிருந்தது.

அதற்குப் பிறகு அழுதுகொண்டிருந்த குழந்தையை ஒருவழியாக அவரின் தந்தை இருக்கையில் சரியான முறையில் அமர்த்தினார்.

குழந்தை அடம்பிடித்ததால் அவரை சரியாக அமர்த்த முடியவில்லை என்று தந்தை குறைகூறியிருந்தார்.

விமான ஊழியர்கள் அவரைப் பலமுறை எச்சரித்திருந்தனர்.

குழந்தைக்கு இரண்டு வயது.

அதன் காரணமாக அவர் தாயுடன் சேர்ந்து அமர அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த புதன்கிழமையன்று மைஏர்லைன் விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

தனது குடும்பம் விமானத்திலிருந்து வெளியேற்றப்படவிருந்ததைச் சுட்டிக்காட்டி குழந்தையின் தந்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டது பலரால் பகிரப்பட்டது.

இரண்டு வயதைத் தாண்டிய சிறுவர்கள் தனி இருக்கையில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கவேண்டும் என்பதை மைஏர்லைன், ஃபேஸ்புக்கில் வலியுறுத்தியது.