ஹனோய்: வியட்னாமின் அரிசி ஏற்றுமதியை 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 4 மில்லியன் டன்னாக குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. சென்ற ஆண்டு அங்கிருந்து 7.1 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.
அரிசி ஏற்றுமதியில் இந்தியா, தாய்லாந்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது வியட்னாம்.
வியட்னாம் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட S$80 மில்லியன் மதிப்புள்ள 80,000 முதல் 90,000 டன் அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறது. இது சிங்கப்பூரின் அரிசி சந்தையில் 20 விழுக்காடாகும்.
உயர்தர அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது, உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஏற்றுமதி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது.
இதன் காரணமாக அரிசி ஏற்றுமதி வருவாய் 2030ல் ஆண்டுக்கு 2.62 பில்லியன் அமெரிக்க டாலராக குறையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது 2022ல் 3.45 பில்லியனாக இருந்தது.
"பருவநிலை மாற்றத்தால் வியட்னாமில் நெற்பயிர் விவசாயப் பகுதி குறைந்து வருகிறது. சில விவசாயிகள் வேறு பயிர்கள், இறால்களை வளர்ப்பதற்கு மாறி வரும் வேளையில் அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் கடினமானதாக இருக்கும்," என்று ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டையும் நம்பியிருப்பதைத் தவிர்க்கும் முயற்சியாக வியட்னாம் அரிசி ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வியட்னாமில் இருந்து அதிக அரிசியை இறக்குமதி செய்யும் நாடாக பிலிப்பீன்ஸ் உள்ளது. வியட்னாமின் கடந்த ஆண்டு ஏற்றுமதியில் 45 விழுக்காட்டை பிலிப்பீன்ஸ் வாங்கியுள்ளது.
வியட்னாமிய அரிசியை இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் உள்ளன.
2025ஆம் ஆண்டிற்குள், வியட்னாமிய அரிசி ஏற்றுமதியில் 60 விழுக்காடு ஆசிய சந்தைகளுக்கும் 22 விழுக்காடு ஆப்பிரிக்காவுக்கும் 7 விழுக்காடு அமெரிக்காவுக்கும் 4 விழுக்காடு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் 3 விழுக்காடு ஐரோப்பாவுக்கும் அனுப்பப்படும் என்கிறது அறிக்கை.

