ஈப்போ: மலேசியாவின் ஈப்போ நகரில் ஒரே வீட்டில் மூன்று வார இடைவெளியில் மூன்று முறை கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீட்டில் 71 வயது சானும் அவரது 80 வயது கணவரும் வசித்து வருகின்றனர். மே 2, மே 11, மே 24 ஆகிய தேதிகளில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்களில் சுமார் 26,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் திருடு போய்விட்டதாக சான் சொன்னார். கொள்ளைச் சம்பவங்களின்போது தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட மற்ற பொருள்களும் பறிபோனதாக அவர் சொன்னார்.
"முதல் முறை வந்த திருடர்கள்தான் இரண்டாவது முறையும் வந்தார்கள் என்று நம்புகிறேன்.
"இரண்டாவது முறை நான் கூச்சலிட்டதால் அவர்கள் தப்பியோடிவிட்டனர். காவல்துறையினர் வரும்வரை அறையைவிட்டு வெளியே வரவில்லை."
"மூன்றாவது முறையும் வந்த திருடர்கள் எங்கள் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர். முகக்கவசம் அணிந்திருந்த அந்த இருவரில் ஒருவன் கத்தியை காட்டி அமைதியாக இருக்கும்படி மிரட்டினான். அவர்கள் என்னை கீழே தள்ளியதில் என்னுடைய வலுது கால் முறிந்துவிட்டது," என்று சான் சொன்னார்.
காவல்துறையினர் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியை பலப்படுத்துவார்கள் என்று நம்புவதாக சொன்னார். இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொன்னார்.

