இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடபகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 பேர் மாண்டுபோயினர்; 25 பேர் காயமுற்றனர்.
இறந்தவர்களில் நான்கு பெண்களும் நான்கு வயதுச் சிறுவனும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் பழங்குடி நாடோடி இனத்தவர் எனக் கூறப்பட்டது.
கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் அவர்கள் தங்களது ஆட்டுமந்தைகளுடன் ஷோன்டர் கணவாய்ப் பகுதியை கடந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவத்தில் மாண்டோருக்காக இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், பருவநிலை மாற்றம் காரணமாக பனிச்சரிவு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
வெகுதொலைவில் இருப்பதாலும் கரடுமுரடான மலைப்பகுதி என்பதாலும் அவ்விடத்தைச் சென்றடைய மீட்புக் குழுக்கள் பெரிதும் சிரமப்பட்டன. மீட்புப் பணியில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

