செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fa4decf8-fa02-441a-8be1-c59335ebf5a3
-

பிஎஸ்ஜிக்கு 11வது லீக் பட்டம்

பாரிஸ்: நட்சத்திர காற்பந்து ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி கோலடிக்க, ஸ்டிராஸ்பர்க் குழுவிற்கெதிரான பிரெஞ்சு லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி குழு சமநிலை கண்டது. இதன்மூலம், இப்பருவத்தில் இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அக்குழு லீக் பட்டத்தை வென்றுவிட்டது. மேலும், பிரெஞ்சு லீக்கில் 11வது முறையாக லீக் பட்டம் வென்ற முதல் குழு என்ற சாதனையையும் அது படைத்தது. கடந்த 11 பருவங்களில் பிஎஸ்ஜி பட்டம் வென்றிருப்பது இது ஒன்பதாவது முறை. இதனிடையே, கிளெர்மோ குழுவிற்கெதிராக இவ்வார இறுதியில் நடக்கவிருக்கும் ஆட்டமே பிஎஸ்ஜி சார்பில் மெஸ்ஸி களமிறங்குவது கடைசி முறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லூட்டன்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் விளையாட 31 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதிபெற்றது லூட்டன் டவுன் குழு. சனிக்கிழமை இரவு 'சாம்பியன்ஷிப் பிளேஆஃப்' இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்புகள் மூலம் 6-5 என்ற கோல் கணக்கில் கொவென்ட்ரி சிட்டி குழுவை அக்குழு தோற்கடித்ததன்மூலம் இது சாத்தியமானது. முன்னதாக, கூடுதல் நேரம்வரை சென்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்டத்தின் போது, தம்மைச் சுற்றி வேறு எவரும் இல்லாத நிலையிலும் லூட்டன் தலைவர் டாம் லாக்கியர், 28, திடலிலேயே சுருண்டு விழுந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். பர்ன்லி, ஷெஃபீல்டு யுனைடெட் குழுக்கள் அடுத்த பருவ லீக்கிற்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன.

இந்திய அணியில் ஜெய்ஸ்வால்

புதுடெல்லி: லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 7-12 தேதிகளில் உலக டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியாளர் போட்டி நடைபெறவுள்ளது. அதில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், தயார்நிலை தொடக்கப் பந்தடிப்பாளராக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ஜூன் முதல் வாரத்தில் ருதுராஜிற்குத் திருமணம் நடக்க உள்ளது. நேற்றுடன் முடிந்த ஐபிஎல் டி20 போட்டிகளில்

21 வயது ஜெய்ஸ்வால் 625 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.