உலக அளவில் உடன்பாடு காண ஒருமித்த முயற்சி
பாரிஸ்: உலகளவில் பிளாஸ்டிக் உடன்பாடு ஒன்றை எட்டும் நோக்கத்தில் பல நாடுகள் பாரிஸ் நகரில் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கின்றன.
உலகளவில் மேலும் பிளாஸ்டிக் தயாரிப்புக்கு வரம்பு விதிக்க வேண்டும் என்று விரும்பும் நாடுகளுக்கு இடையே முன்னதாக விவாதிப்புகள் இடம்பெற்றன.
பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதே பிளாஸ்டிக் கழிவுகளுக்குத் தீர்வு என்று பெட்ரோலிய ரசாயன தொழில்துறை கூறுகிறது.
இதன் தொடர்பிலான பேச்சுவார்த்தை நேற்று பாரிசில் தொடங்கியது. அதற்கு முன்னதாக பல நாடுகளும் சேர்ந்து ஓர் அறிவிப்பை விடுத்தன.
உலகளவில் பிளாஸ்டிக் தொடர்பில் இடம்பெறக்கூடிய உடன்பாடு, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களைக் கூடுமானவரை அதிக காலத்திற்குப் பயன்படுத்துவதை வலியுறுத்த வேண்டும் என்று அந்த நாடுகள் கூறின.
ஐநா சுற்றுச்சூழல் செயல்திட்ட அமைப்பு பாரிஸ் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. வரும் 2040வது ஆண்டு வாக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை 80 விழுக்காடு குறைக்க வேண்டும் என்பதற்கான ஓர் அடிப்படைத் திட்டத்தை அந்த ஐநா அமைப்பு வெளியிட்டு உள்ளது.
அந்தத் திட்டம் செயல் சார்ந்த மூன்று துறைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. மறுபுழக்கம், மறுசுழற்சி, பிளாஸ்டிக் பொட்டலங்கள் அல்லது மாற்றுப் பொருள்கள் மறுசீரமைப்பு ஆகியவை அந்த மூன்று செயல்முறைகள்.
பிளாஸ்டிக் கழிவு நிர்வாகத்தில் அந்த அறிக்கை ஒருமித்த கவனத்தைச் செலுத்தி இருக்கிறது என்று சில சுற்றுச்சூழல் குழுமங்கள் குறைகூறி இருக்கின்றன.
உலகளாவிய பிளாஸ்டிக் பெட்ரோலிய ரசாயன தொழில்துறைக்குச் சலுகை காட்டும் வகையில் அந்த அறிக்கை இருக்கிறது என்றும் அவை தெரிவித்துள்ளன.
பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் நெருக்கடிக்கு உண்மையான தீர்வு ஏற்பட வேண்டுமானால் அதற்கு பிளாஸ்டிக் ரசாயன பொருள்களுக்கு உலகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்;
பிளாஸ்டிக் உற்பத்தி கணிசமான அளவுக்குக் குறைய வேண்டும் என்று அந்தக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ன.

