கோலாலம்பூர்: மலேசியாவின் அனுமதியின்றி அதனுடைய கடற்பகுதிக்குள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட சீனாவில் பதிவு பெற்ற கப்பலை மலேசிய அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.
அந்தக் கப்பலில் இரண்டாம் உலகப் போரைச் சேர்ந்தவை என்று நம்பப்படும் பீரங்கிக் குண்டுகள் காணப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பியர்ல் துறைமுகத்தில் 1941ஆம் ஆண்டு ஜப்பானிய விமானங்கள் படுபயங்கர தாக்குதல்களை நடத்தின.
அதற்கு மூன்று நாள் கழித்து பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு கப்பல்களை ஜப்பானிய விமானங்கள் மூழ்கடித்துவிட்டன.
பழைய பொருள்களைச் சேகரிப்போர் அந்த இரண்டு கப்பல்களைக் குறிவைத்து இருக்கிறார்கள் என்று இந்த மாதம் தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் அந்தக் கப்பலில் இருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
சீனாவின் ஃபூஷு நகரில் பதியப்பட்ட ஒரு கப்பல் 32 ஊழியர்களுடன் மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூர் அருகே தன் கடல் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் வந்ததாக மலேசிய கடல்துறை அமலாக்க அமைப்பு தெரிவித்தது.
கப்பலில் பழைய உலோகப் பொருள்களும் பீரங்கிக் குண்டுகளும் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அவை 2ஆம் உலகப் போரைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

