செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ceb3b2a3-94e5-4a01-b85b-8e5d010035a6
-
multi-img1 of 2

அடுத்த மாதம் கூட்டம் நடத்தும் வடகொரிய ஆளுங்கட்சி

பியோங்யாங்: வடகொரியாவின் பொருளியல் திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்காக அந்த நாட்டின் ஆளும் கட்சி அடுத்த மாதத் தொடக்கத்தில் முக்கியமான கூட்டத்தை நடத்தும் என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

அந்தக் கூட்டம், இந்த ஆண்டின் முதல் பாதியில் அமலாகின்ற தேசிய பொருளியல் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும். கொள்கை முக்கியத்துவத்தில் அந்தக் கூட்டம் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அது, வட கொரியாவை ஆளும் கொரிய உழைப்பாளிகள் கட்சியின் எட்டாவது மத்தியக் குழுவின் எட்டாவது முழுக் கூட்டமாகும்.

எர்துவான் துருக்கி அதிபரானார்

அங்காரா: துருக்கியின் அதிபராக தயிப் எர்துவான், 69, மீண்டும் தேர்வானார். ஞாயிற்றுக்கிழமை நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார்.

திரு எர்துவான், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு அப்பதவியைக் கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியைக் கொண்டு வந்தார்.

அதன்பிறகு இப்போதுவரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவருக்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.

அரிய வெள்ளை பாண்டா கரடி

செங்டு: சீனாவின் தென் மேற்கு சீசுவான் மாநிலத்தில் உள்ள வூலோங் தேசிய இயற்கை வளக் காப்பகத்தில் உடல் முழுவதும் வெள்ளை நிறத்திலான பாண்டா கரடி குட்டி தனது தாய்க் கரடியை நோக்கிச் சென்றதை (படம்: சின்ஹூவா) படச்சாதனங்கள் பிப்ரவரி மாத முடிவில் படம்பிடித்து இருக்கின்றன என்று அந்தக் காப்பக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகிலேயே அத்தகைய வெள்ளை நிற பாண்டா வேறு இல்லை. அந்தப் பாண்டாவுக்கு இரண்டு வயது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வடகொரியா எச்சரிக்கை;

ஜப்பான் ஆயத்தம்

பியோங்யாங்: வடகொரியா, மே 31ஆம் தேதிக்கும் ஜூன் 11ஆம் தேதிக்கும் இடையில் தான் செயற்கைக்கோள் ஒன்றைப் பாய்ச்சப்போவதாக ஜப்பானிடம் தெரிவித்தது.

அதையடுத்து ஜப்பான் தன்னுடைய எல்லைக்கு மிரட்டல் விடுக்கும் எந்தவொரு விண்கலனையும் சுட்டுவீழ்த்திவிடப்போவதாக எச்சரித்தது.

அதோடு, தன்னுடைய அணு ஏவுகணை தற்காப்பு நிலைகளை ஜப்பான் விழிப்பு நிலையில் வைத்தது.

அணுஆயுத பலம் பெற்றுள்ள வடகொரியா, தன்னுடைய முதலாவது ராணுவ வேவு செயற்கைக் கோளை உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அந்தச் செயற்கைக்கோளை விண்வெளிப்பாதையில் சுற்றிவரும் வகையில் மேலே கொண்டுசெல்ல இறுதி ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டு இருக்கிறார்.

அந்தச் செயற்கைக்கோள் ஜப்பானின் எல்லை வழியாக கடந்து செல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று ஜப்பான் அமைச்சரவை தலைமைச் செயலாளர் ஹிரோசாஷு மட்ஸ்சுனோ செய்தியாளரிடம் கூறினார்.