ஓய்வுபெறப்போவதில்லை டோனி
அகமபாத்: தான் ஓய்வுபெறப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் டோனி (படம்).
தான் ஓய்வுபெற இதுவே ஆகச் சிறந்த காலகட்டம், என்பதை ஒப்புக்கொண்ட டோனி, தன்மீது காட்டப்பட்ட அன்பு, அரவணைப்பு காரணமாக இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்து விளையாடப்போவதாகத் தெரிவித்தார்.
"ரசிகர்கள் என்மீது காட்டிய அன்பையும் அரவணைப்பையும் பார்க்கும்போது அவர்களுக்காக நான் இதைச் செய்தே தீரவேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்றார் டோனி.
தான் விளையாடும் ஐபிஎல் குழுவான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் விருதை வென்றவுடன் இவ்வாறு அறிவித்தார் டோனி.
ஐபிஎல் விருதை வென்ற சிஎஸ்கே
அகமதாபாத்: ஐந்தாவது முறையாக ஐபிஎல் கிரிக்கெட் விருதை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). குஜராத் டைட்டன்சுக்கு எதிரான பிளேஆஃப் சுற்று இறுதியாட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ஓட்டங்களை விளாசி டக்வர்த்-லூயிஸ் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது சென்னை. மழை பெய்ததால் டக்வர்த்-லூயிஸ் முறைப்படி வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்பட்டது.
முதலில் பந்தடித்த குஜராத் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு 15 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது சென்னை.
நாளை மறுநாள் சிங்கப்பூரில் இருப்பார் ரொனால்டோ
சிங்கப்பூர்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்) நாளை மறுநாள் முதல் வரும் சனிக்கிழமை வரை சிங்கப்பூரில் இருப்பார். அவர் இங்கு இருக்கும் காலகட்டத்திற்கு #BeSIUPER என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் நீண்டநாள் நண்பரான சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம் இளையர்களுக்கான உபகாரச் சம்பளத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். அதற்கு ஆதரவு வழங்க இங்கு வருகை தருகிறார் 38 வயது போர்ச்சுகல் நட்சத்திரமான ரொனால்டோ.
தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து திரு பீட்டர் லிம் 'என்பார்க்ஸ்-பீட்டர் லிம்' எனும் உபகாரச் சம்பளத் திட்டத்தைத் தொடங்கினார். அதற்கு 10 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் குழுவுக்கு விளையாடும் ரொனால்டோ, உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

