சோல்: வடகொரியா நேற்று பாய்ச்சிய விண்வெளி செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது. துணைக்கோலைப் பாய்ச்சப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பாகங்களை மீட்டுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியது.
'சொல்லிமா-1' என்று பெயரிடப்பட்ட வடகொரியாவின் புதிய உந்துகணையின் எரிசக்தி முறையும் எஞ்சின் இயந்திரமும் சீராக இயங்கவில்லை. அதுவே துணைக்கோல் கடலில் விழுந்ததற்குக் காரணம் என்று வடகொரியாவின் கேசிஎன்ஏ தொலைக்காட்சி தெரிவித்தது.
ஆறாவது முறையாக செயற்கைக்கோளைப் பாய்ச்சும் முயற்சியில் ஈடுபட்டது வடகொரியா. இதற்கு முன்பு கடைசியாக 2016ஆம் ஆண்டில் முயற்சி செய்தது.
நேற்றைய நிகழ்வால் தென்கொரியாவிலும் ஜப்பானிலும் சிறிது நேரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவ்விரு நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் எச்சரிக்கைகள் மீட்டுக்கொள்ளப்பட்டன. எவ்வித சேதமோ அபாயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தென்கொரியத் தலைநகர் சோலில் அபாய ஒலி அடித்தது, மக்கள் தங்களின் கைப்பேசிகளில் எச்சரிக்கைக் குறிப்புகளைப் பெற்றனர். வீடுகளிலிருந்து வெளியேறுமாறு வந்த எச்சரிக்கை சோல் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது, அங்குள்ள மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத சூழல்.
வடகொரியா, அதன் உந்துகணையை தென்கொரியாவை நோக்கிப் பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது, அதனால்தான் எச்சரிக்கைகள் விடுக்கவேண்டிய நிலை உருவானதென அது குறிப்பிட்டது.
உளளூர் நேரப்படி காலை 6.32 மணிக்கு சோலில் அபாய ஒலி அடித்தது. வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருக்கலாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியேறுமாறு எச்சரிக்கை வந்திருக்கிறது.
சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அது தவறான தகவல் என்று நகரின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகொரியா பாய்ச்சிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது