ஷாங்காய்: சீனாவில் பொதுவாக ஜூன் மாதத்திலிருந்துதான் வெயில் காலம் தொடங்கும். ஆனால் இவ்வாண்டு மே மாதத்திலிருந்தே அங்கு வெப்பநிலை என்றும் இல்லாத அளவு அதிகமாகப் பதிவாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் சீனா அனல் காற்றுக்கு உள்ளானது. அந்நாட்டில் மின்சக்தித் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இப்போது மீண்டும் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படும் நிலைமை எழுந்துள்ளது. எனினும், இப்படிப்பட்ட சூழலைக் கையாள மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா கூடுதல் தயார்நிலையில் இருக்கிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லன்டாவ் குழுமம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கான மாற்று ஏற்பாடுகளை சீனா செய்திருப்பதாக குழுமத்தின் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
உலகளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் ஒருகாலத்தில் அவ்வப்போது நேர்ந்த பருவநிலை நிகழ்வுகள் இனி அடிக்கடி நிகழக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நிலைமையைச் சமாளிக்க சரிவரத் திட்டமிடுவது அவசியம். அந்த வகையில் மின்சார விநியோக நிறுவனங்கள் சீனாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வது முக்கியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

