நியூயார்க்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடந்துவரும் போரில் ரஷ்யாவின் அதிரடித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் உக்ரேனுக்கு அமெரிக்கா $406 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை அளித்து உதவப்போவதாக புதன்கிழமை அறிவித்தது.
அமெரிக்காவின் இந்தப் புதிய உதவித்தொகுப்புத் திட்டத்தில் பேட்ரியாட் ஆகாயத் தற்காப்புச் சாதனம், எய்ம்-7 ஏவுகணைகள், அவெஞ்சர் ஆகாயத் தற்காப்பு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காக்கும் ஸ்டிஞ்சர் ஏவுகணைகள், மில்லியன் கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவை அடங்கும்.
உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. அதுமுதல் அமெரிக்கா, ராணுவ ரீதியில் உக்ரேனுக்கு ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் என உதவி வழங்கி வருகிறது.
இப்போது அறிவித்துள்ள புதிய உதவித் திட்டத்துடன் உக்ரேனுக்கு அமெரிக்கா இதுவரை அளித்துள்ள உதவித்திட்டங்களின் மொத்த மதிப்பு US$37.6 பில்லியன் என்று கணக்கிடப்படுகிறது.
நட்பு நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு, ரஷ்யா தொடுக்கும் தாக்குதலை எதிர்கொள்ளும்வகையில் உக்ரேனுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு தொடரும் என்றும் அமெரிக்காவின் தற்காப்புத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நேட்டோ மற்றும் கூட்டணி நாடுகளின் முயற்சியில் அமெரிக்கா இதுவரையிலும் இல்லாத வகையில் உக்ரேனுக்கு ஆயுதங்களையும் நிவாரண உதவிகளையும் அளித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா புதிதாக அனுப்பவிருக்கும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யப் படைகளை விரட்டியடித்து ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளை மீட்கும் முயற்சிக்கு உக்ரேன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
