கேப்டவுன்: பிரிக்ஸ் அமைப்பின் அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் மேற்கத்திய சக்திகளை முறியடிக்கும் தங்கள் அமைப்பின் விருப்பத்துக்குத் தங்கள் கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினர்.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கலந்துகொண்டால், அங்கு அவர் கைது செய்யப்படும் சாத்தியம் குறித்தும் பேசினர்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பன்டோர் பேசுகையில், "ஜோகனஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டுக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க் குற்றம் தொடர்பான கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள அதிபர் புட்டின் வந்தால் என்ன செய்வது," என்று கூறினார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினரான தென் ஆப்பிரிக்கா கோட்பாட்டளவில் திரு புட்டினை கைது செய்ய வேண்டியிருக்கும்.
"இந்த விவகாரத்தின் சட்டத் தெரிவுகள் குறித்து எங்கள் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இறுதி முடிவை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா எடுப்பார். இப்போதைக்கு பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பி விட்டோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
உச்சநிலை மாநாட்டுக்கு தாம் வருவது குறித்து ரஷ்ய அதிபர் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், ரஷ்யாவைப் பிரதிநிதித்து உயர்மட்ட அதிகாரி ஒருவர் கலந்துகொள்வார் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரேனில் ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளிலிருந்து சிறுவர்களைப் பலவந்தமாக வெளியேற்றியதற்காக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் குற்றம் சாட்டியது. ஆனால், மாஸ்கோ அதை மறுத்தது.
கேப்டவுன் சந்திப்பின்போது தொடக்க உரையாற்றிய பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென் ஆப்பிரிக்க அமைச்சர்களும் சீனாவின் துணை அமைச்சரும், பன்முனை உலகில் தங்கள் அமைப்பின் தலைமைத்துவ பிரிதிபலிப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
"பொருளாதார சக்தியின் செறிவு பற்றி பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "சில நாடுகளின் வலுவான சக்தியால் பல நாடுகள் முடங்கி கிடக்கின்றன.
ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றம் உட்பட உலகளவில் எடுக்கப்படும் முடிவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். புதிய சூழ்நிலைகளுக்குப் பழைய வழிகளைக் கொண்டு தீர்வு காண முடியாது," என்று தெரிவித்தார்.

