கொலாராடோ ஸ்பிரிங்ஸ்: அமெரிக்க ஆகாயப் படை பட்டமளிப்பு விழாவில் வியாழனன்று பங்கேற்ற அதிபர் ஜோ பைடன், விழா இறுதியில் கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு முழங்காலை ஊன்றி எழுந்த பைடனை மற்றவர்கள் கைப்பிடித்து தூக்கிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து 80 வயதான திரு பைடன், தமது இருக்கைக்கு எவருடைய உதவியுமின்றி சென்றதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
எழுந்த பின்னர் திரு பைடன் தமக்கு பின்னால் உள்ள எதையோ சுட்டிக் காட்டினார். அதன் மூலம் தான் கீழே விழக் காரணமாக ஏதோ ஒன்று இருந்ததை அவர் சுட்டினார். வெள்ளை மாளிகைக்கு திரும்பிய திரு பைடன், அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்து மணல் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோணிப் பையால் தாம் தடுக்கப்பட்டதாக நகைப்புடன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த வெள்ளை மாளிகை தொடர்புத் துறை அதிகாரி பென் லபோல்ட், விழாவில் மற்றவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த இடத்தில் மணல் அடைக்கப்பட்ட கோணிப்பை இருந்ததாகக் கூறினார். விழாவில் பேசிய திரு பைடன், புதிதாக தேர்ச்சி பெற்ற வீரர்கள் சீன, ரஷ்ய அச்சுறுத்தல் நிரம்பிய உலகை எதிர்கொள்வர் என்றார்.

