கோலாலம்பூர்: இவ்வாண்டு கார் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 1,225 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என்று மலேசிய காவல்துறை தெரிவித்தது. 'லெஜாங் காஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் சோதனைகளில் கார் திருட்டு சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
இந்தச் சோதனையில் 847 வாகனங்களைக் காவல்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு 19.8 மில்லியன் ரிங்கிட்.
"நாங்கள் 6,709 விசாரணை களைத் தொடங்கியுள்ளோம். ரொக்கமாக 502,865 ரிங்கிட்டை பறிமுதல் செய்துள்ளோம். இதுவரை 1,658 சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 639 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன," என்று நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் காவல்துறை தெரிவித்தது. பொதுமக்களும் தங்களுடைய வாகனங்கள் திருடப்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. "கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வாகனங்களைக் கும்பல் குறி வைப்பதில்லை என்பது எங்களுடைய ஆய்வில் தெரிய வந்துள்ளது," என்றது காவல்துறை.
வாகனங்கள் திருட்டுப் போனால் உடனடியாக புகார் அளிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

