மலாக்கா: சாலைகளில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோரை அவசர மருத்துவ உதவி வாகனங்களாக (ஆம்புலன்ஸ்) இயங்கும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களாகத் தயார்ப்படுத்துவது குறித்து மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அம்மாநில குடிமைத் தற்காப்புப் படையின் இணை வர்த்தக அதிகாரிகள் பிரிவின் தலைவர் மைக் தீன் இதைத் தெரிவித்தார்.
மாட் ரெம்பிட் என்றழைக்கப்படும் சாலைப் பந்தயத்தில் ஈடுபடும் மோட்டார்சைக்கிள் குழுக்களில் இருப்போரை இந்தப் பணிக்கு நியமிக்க திட்டம் வரையப்பட்டு வருவதாக அவர் கூறினார். மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோரை சமூகத்துக்குப் பலனளிக்க வைப்பது இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
"இதய இயக்க மீட்பு சிகிச்சை வழங்குவது உட்பட உயிருக்குப் போராடிக்கொண்டிருப்போருக்கு உதவும் உத்திகள் இந்த மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குக் கற்றுத்தரப்படும். அதோடு, வெள்ளம் ஏற்படும்போது அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்லும் முன்னரே பாதிக்கப்பட்டோருக்கு உணவு விநியோகிப்பது போன்ற திறன்களும் கற்றுத்தரப்படும்," என்று திரு தீன் கூறினார்.
மலாக்காவின் சில சுற்றுலாத்தலங்களைச் சென்றடைவது சிரமமானது. அத்தகைய இடங்களுக்குச் சென்று அவசர சேவைகளை வழங்கும் இரண்டு சக்கர வாகனங்கள் வெளியிடப்படும் என்றும் திரு தீன் சொன்னார்.
மருத்துவ உதவியாளர்கள் பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகனங்களில் அவசர மருத்துவத் தேவைகளுக்கான அனைத்து பொருள்களும் கருவிகளும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வேன், கார் போன்ற வாகனங்களைவிட இவற்றால் வெகுவேகமாக சம்பவ இடத்துக்குப் போகமுடியும் என்பதையும் திரு தீன் குறிப்பிட்டார்.
மலாக்காவில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோருக்கு மாறுபட்ட வாய்ப்பு

