பாலிக் புலாவ்: மலேசியாவில் மோட்டார்சைக்கிளில் வித்தைகளைப் புரிந்துகொண்டிருந்த ஒரு பதின்ம வயது ஓட்டுநர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
வித்தைபுரிந்துகொண்டிருந்த வேளையில் சாலை சமிக்ஞை சிவப்பு நிறத்தில் இருந்தபோது அதைத் தாண்டிய அவரின் மோட்டார் சைக்கிள் ஒரு வாகனத்துடன் மோதியது. சம்பவ இடத்திலேயே 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.
இச்சம்பவம் பினாங்கில் உள்ள துன் டாக்டர் லிம் சோங் இயு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் காலை 4.30 மணியளவில் நிகழ்ந்ததாக பாலிக் புலாவ் நகர காவல்துறை சூப்பரின்டென்டன்ட் கமாருல் ரிஸால் ஜெனால் தெரிவித்தார். விபத்தில் முகம்மது அக்கிட் மாட் ரோஸி என்ற மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்தில் மாண்டதாகவும் அவர் கூறினார்.
மாண்டவர் பாலிக் புலாவ் நகரின் பெர்மாத்தாங் திம்புல் பகுதியைச் சேர்ந்தவர். மோட்டார் சைக்கிள் மோதிய வாகனத்தின் ஓட்டுநருக்கு இடது கையில் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

