விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
67ea86f7-9752-4b95-823b-bdc86af76ca0
-

ஓய்வுபெறுகிறார் 41 வயது ஸ்லாட்டான்

மிலான்: ஸ்வீடன் காற்பந்து நட்சத்திரம் ஸ்லாட்டான் இப்ராஹிமொவிச் (படம்) தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 41 வயது ஸ்லாட்டான் கடைசியாக இத்தாலிய குழுவான ஏசி மிலானுக்கு விளையாடினார்.

பொதுவாக காற்பந்து வீரர்கள் ஏறத்தாழ 36 வயதுவரை விளையாடுவதுதான் வழக்கம். அதுவும் பெரும்பாலும் 32 வயதான பிறகு அவர்களின் விளையாட்டில் பழைய வேகம் இருக்காது.

ஆனால் அத்தகைய நம்பிக்கைகளைப் பொய்யாக்கிய ஓரிரு காற்பந்து நட்சத்திரங்களில் ஸ்லாட்டானும் ஒருவர். தாக்குதல் ஆட்டக்காரரான இவர் தான் விளையாடிய எல்லாக் குழுக்களுக்கும் கோல்களைக் குவித்திருக்கிறார்.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உலகின் தலைசிறந்த குழுக்களுக்கு விளையாடி அசத்தியவர் ஸ்லாட்டான். விளையாட்டில் மட்டுமல்லாமல் தனது கிண்டல் பேச்சாலும் சர்ச்சைக்குரிய கருத்துகளாலும் ஸ்லாட்டான் பல தரப்பினரைக் கவர்ந்திருக்கிறார்.

பென்ஸீமா சவூதியில் விளையாடப்போவதாகத் தகவல்

மட்ரிட்: பிரான்ஸ் காற்பந்து நட்சத்திரம் கரீம் பென்ஸீமா (படம்) ஸ்பானிய லீக் குழுவான ரியால் மட்ரிட்டிலிருந்து வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பென்ஸீமா சவூதி அரேபியக் குழுவான அல் இட்டிஹாட்டில் சேரப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பானிய லீக்கில் ரியாலும் அத்லெட்டிக் பில்பாவும் மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதில் பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி ஆட்டத்தைச் சமப்படுத்தினார் 35 வயது பென்ஸீமா.

இரண்டாவது தங்கம் வென்ற கொலின் சூன்

சிங்கப்பூர்: சிறப்புத் தேவையுடையோருக்கான தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் சிங்கப்பூர் நீச்சல் வீரர் கொலின் சூன்.

நேற்று நடைபெற்ற ஆண்கள் எஸ்பி13

50 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் இவர் தங்கம் வென்றார். 33.47 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கத்தைக் கைப்பற்றினார் 18 வயது கொலின் சூன்.