கோலாலம்பூர்: அண்மையில் திருமணம் செய்துகொண்ட மலேசிய ஆடவர், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சிப்பாங் கெச்சில் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த இரு சிறுமிகளைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த சிறுமிகள் இருவரும் மாண்டது மட்டுமல்லாது, காப்பாற்ற முயன்ற அந்த ஆடவரும் உயிர்இழந்தார்.
திருமணம் செய்த பிறகு தமது கணவரான 29 வயது திரு முகம்மது ஃபைசால் மஹாசானுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருந்ததாக அவரது மனைவி திருவாட்டி நூர் ஃபத்திஹா முகம்மது கூறினார். பயணத்துக்குத் தேவையான பொருள்களை வாங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வெளியே சென்றனர். அப்போது ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த இரு சிறுமிகளைக் காப்பாற்ற தமது கணவர் ஆற்றில் குதித்ததாக நூர் தெரிவித்தார். ஒரு சிறுமியை அவர் கரை சேர்த்தார். இன்னொரு சிறுமியைக் காப்பாற்ற சென்றபோது அவரும் அச்சிறுமியும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். கரை சேர்ந்த சிறுமி உட்பட திரு ஃபைசாலும் இன்னொரு சிறுமியும் மாண்டனர். திரு ஃபைசாலின் உடல் சம்பவம் நிகழ்ந்த மறுநாள் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டது.