ஹானலுலு: அமெரிக்காவின் ஹாவாய் தீவில் உள்ள கிளாயுவா எரிமலை நேற்றுக் காலையில் வெடித்துச் சிதறியது.
அதன் காரணமாக வெளியான அடர்த்தியான சாம்பல் துகள்கள் விண்ணை முட்டின.
அந்த எரிமலை சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10.44 மணிக்கு வெடித்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறையும் ஹாவாயின் எரிமலை கண்காணிப்பு நிலையமும் நேற்று தெரிவித்தன.
எரிமலை வெடித்த ஒரு மணி நேரத்தில், எரிமலையின் மேற்பகுதிகறுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்பட்டது.
பின்னர் அந்த மேற்பரப்பில் நெருப்புக் குமிழிகளைக் காணமுடிந்தது என்றும் பின்னர் அந்தப் பகுதி நெருப்புப் பாறைபோல் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் கென் ஹோன் கூறினார்.
மேலும் அவர், எரிமலைக் குமுறல் முழுமையடைந்ததும் அப்பகுதி ஒளிமிகுந்ததாக காட்சிதரும் என்று கூறினார்.
எப்போது வெடிக்கும் என்று கணிக்கமுடியாத நிலையில் எப்போதும் சீற்றத்துடன் காணப்படும் அந்த எரிமலை திடீரென நேற்று குமுறி வெடித்தது. இது இந்த ஆண்டில் நிகழும் இரண்டாவது குமுறல். இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் இந்த எரிமலை குமுறியது.
எரிமலைக் குமுறலை அடுத்து ஹாவாய் தீவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தொடர் வெடிப்புகள் நிகழக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இருப்பினும் நாட்டின் முக்கிய கட்டமைப்புகளுக்கோ மனிதர்களின் உயிருக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தல் இல்லை என்று எரிமலைக் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் முக்கியமாக, எரிமலைக் குமுறலில் இருந்து வெளியேறும் வாயு புகை ஒன்றுமட்டும்தான் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அந்த நிலையத்தின் விஞ்ஞானி ஹோன் தெரிவித்தார்.