கியவ்: ரஷ்யத் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரேனின் பதில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் நேட்டோ கூட்டமைப்பின் தரநிலைகளுக்கு உகந்த டாங்கிகளையும் ராணுவ வாகனங்களையும் உக்ரேன் பயன்படுத்தி வருவதாக ராணுவ கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவற்றில் உற்பத்தியான டாங்கிகளும் ராணுவ வாகனங்களும் டொக்மாக் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. டொக்மாக், ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரேனின் தெற்குப் பகுதியில் இருக்கும் நகரம்.
ரஷ்ய ராணுவ வீரர்கள் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த படங்களில் இந்த டாங்கிகளும் வாகனங்களும் காணப்பட்டன. அவை நம்பகரமான படங்களைப்போல் தெரிந்ததாகசில தகவல்கள் வெளியாயின.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களையும் சம்பந்தப்பட்ட பயிற்சிகளையும் அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் உக்ரேனுக்கு வழங்கியுள்ளன. ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரேனுக்கு உதவுவது இலக்கு.
கிழக்கு உக்ரேனில் இருக்கும் டொனியெட்ஸ்க் வட்டாரத்தில் இடம்பெறும் சண்டையில் உக்ரேன் பலனடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி முன்னதாகக் கூறியிருந்தார்.
"டொனியெட்ஸ்க் வட்டாரத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது," என்று தினமும் காணொளி வாயிலாக மேற்கொள்ளும் அறிவிப்பில் திரு ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
"பலன் இருக்கிறது. அதற்குக் காரணமானவர்களுக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். பாக்முட்டில் சிறப்பாகச் செய்தனர். படிப்படியாக முன்னேறுவோம்," என்று அவர் கூறினார். மேல்விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, உக்ரேனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களைத் தான் வெகு விரைவில் அனுப்பி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. கக்கொவ்கா அணைக்கட்டு உடைந்துபோனதால் உக்ரேனின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.