மீண்டும் சிங்கப்பூர் அணியில் இடம்பெறாத சோ ருய் யோங்
சிங்கப்பூர்: வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுகளுக்கான சிங்கப்பூர் அணியில் நெடுந்தொலைவோட்ட வீரர் சோ ருய் யோங் (படம்) சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சுமார் ஒரு மாதத்துக்கு முன்புதான் அவர் மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
அண்மையில் கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் நடைபெற்ற இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின்
10 கிலோமீட்டர் நெடுந்தொலைவோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சோ. தனக்குக் கொடுத்த வாக்குகளுக்கு இணங்க சோ நடந்துகொள்ளாததால் அவரை ஆசிய விளையாட்டுகளுக்கான சிங்கப்பூர் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் சங்கம் கூறியது.
கம்போடியாவில் முத்திரை பதித்த சிங்கப்பூர் வீரர்கள்
நோம்பென்: இவ்வாண்டின் சிறப்புத் தேவையுடையோருக்கான தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வீரர்கள் மொத்தமாக 12 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
சிறப்புத் தேவையுடையோருக்கான தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் மூன்று முறைதான் இதைவிட சிறப்பாகச் செய்திருக்கிறது. மற்ற நாடுகள் ஏற்று நடத்திய விளையாட்டுகளுக்கு இது பொருந்தும்.
நேற்று முன்தினம் நடைபெற்ற எஸ்13 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சகோதரர்கள் கொலின் சூ, சோஃபி சூ இருவரும் தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் வெற்றிகண்டார் கொலின் சூ. பெண்கள் பிரிவில் சோஃபி சூ வாகை சூடினார். இருவரும் சிறப்புத் தேவையுடையோருக்கான தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்தனர்.
சாதனை படைக்கும் விளிம்பில் சிட்டி
இஸ்தான்புல்: வரலாறு படைக்க ஆயத்தமாகிறது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டி.
ஒரே பருவத்தில் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் ஆகிய மூன்றையும் வென்ற ஒரே பிரிமியர் லீக் குழு என்ற பெருமை மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு உள்ளது. அதை மாற்றும் முயற்சியில் இன்று இறங்குகிறது சிட்டி.
இப்பருவத்தில் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம் இரண்டையும் வென்றுவிட்ட சிட்டி சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் இத்தாலியின் இன்டர் மிலானைச் சந்திக்கிறது.

