வாஷிங்டன்: அமெரிக்காவின் அணுவாயுத, ஆயுதத் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் ரகசிய ஆவணங்களை அந்நாட்டின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்துக்கொண்டதாக அவர்மீதான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. அதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ரகசிய அரசாங்க ஆவணங்களைத் திரு டிரம்ப், ஃபுளோரிடாவில் உள்ள தமது மார்-அ-லாகோ வீட்டில் ஒளித்து வைத்ததாக 49 பக்கங்கள் உள்ள குற்றப் பத்திரிகையில் பதிவுசெய்யப்பட்டது. அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு, மத்திய உளவுத்துறைப் பிரிவு உள்ளிட்டவற்றின் ஆவணங்களும் அவற்றில் அடங்கும் என்று குற்றச்சாட்டில் சொல்லப்படுகிறது.
மார்-அ-லாகோ வீடு, பல்லாயிரக்கணக்கான விருந்தினர் கலந்துகொள்ளும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் தொடர்பிலான தகவல்கள் உள்ள ரகசிய ஆவணங்களை அனுமதி பெறாதோரிடம் 76 வயது திரு டிரம்ப் காட்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் இருக்கும் தமது கால்ஃப் நிலையத்தில் குறைந்தது இரண்டு முறை திரு டிரம்ப் இவ்வாறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு டிரம்ப் 37 குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருக்கிறது. தெரிந்துகொண்டே தேசியத் தற்காப்புத் தகவல்களை வைத்திருந்ததன் தொடர்பிலான 31 குற்றங்கள் அவற்றில் அடங்கும். நிரூபணமானால் அந்த ஒவ்வொரு குற்றத்துக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
நீதித்துறைக்கு இடையூறு விளைவிக்கத் திட்டம் தீட்டியது, போலி வாக்குமூலங்களை வழங்கியது உள்ளிட்டவற்றின் தொடர்பிலான குற்றங்களும் குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ளன.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையின்போது திரு டிரம்ப் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

