காவ்சியுங் (தைவான்): தைவானின் காவ்சியுங் நகர துறைமுகத்தில் ராணுவப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. சிலர் பிணை பிடித்து வைக்கப்பட்டதுபோன்ற பாவனைத் தாக்குதலைக் கையாளும் பயிற்சியை தைவானியப் படைகள் நேற்று மேற்கொண்டன. தைவானின் கரையோரக் காவல் படையினர், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சீனா, தைவானுக்குத் தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகிறது. சீனாவின் ஆகாயப் படை விமானங்கள் தைவானின் ஆகாய எல்லைக்குள் நுழைவதும் வழக்கமானது.
இப்படிப்பட்ட சூழலில் தைவான் அடிக்கடி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தைவான் தனக்குச் சொந்தமானது என்று சீனா சொந்தம் கொண்டாடுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக தைவானைத் தன்வசப்படுத்தத் தயாராய் இருப்பதாகவும் சீனா கூறியிருக்கிறது.