பிலிப்பீன்சில் சாம்பல், பாறைகளைக் கக்கும் மேயன் எரிமலை
மணிலா: பிலிப்பீன்சில் மேயன் எரிமலை குமுறுவதால், அதற்கு அருகே வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது ஒரு எரிமலை நிலநடுக்கமாவது பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய மாநிலமான அல்பேயில் உள்ள மேயன் எரிமலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சிவப்புப் பாறைகள் விழுந்தன.
அந்த எரிமலையின் அடிவாரத்தில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் 12,800க்கும் அதிகமானோர் நிவாரண நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் குடிமைத் தற்காப்பு அலுவலகம் தெரிவித்தது.
தலைநகர் மணிலாவுக்கு தென்கிழக்கில் ஏறத்தாழ 330 கிலோமீட்டர் தூரத்தில் மேயன் எரிமலை உள்ளது. சல்ஃபர் வாயு வெளியேற்றம் நேற்று முன்தினம் மும்மடங்கானதாக எரிமலை நிபுணர்கள் கூறினர்.
இதற்கிடையே, எரிமலை குறித்த ஐந்து அடுக்கு எச்சரிக்கை முறை கடந்த வியாழக்கிழமை இரண்டில் இருந்து மூன்றுக்கு உயர்த்தப்பட்டது. நச்சு வாயுவை நுகர்வதால் சுவாசப் பிரச்சினை ஏற்படும் அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
பசிபிக் நெருப்பு வளையத்தில் பிலிப்பீன்ஸ் அமைந்து இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவதும் எரிமலை குமுறுவதும் வழக்கம்.
பிலிப்பீன்சை உலுக்கிய ஆக சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு 1991ல் ஏற்பட்டது. அதில் 800க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

