மோண்ட்ரியல்: கனடாவில் பரவிவரும் காட்டுத் தீ தீவிரம் அடைந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவில் கட்டுக்கடங்காமல் படர்ந்துவரும் காட்டுத்தீ கோடைக்காலம் முழுவதும் நீடிக்கக்கூடும் என்று மாநில அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து 46,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையானது.
குறிப்பாக, கனடாவின் மேற்குப் பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் மக்கள்தொகை 2,400. அந்நகரை நோக்கி காட்டுத் தீ படர்ந்ததால் அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டனர்.
கியூபெக் மாநிலத்தின் மத்திய, வடமேற்குப் பகுதிகளில் நிலவரம் மோசமாக இருப்பதாக கியூபெக் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஃபிரான்குவாய் பொனார்டெல் கூறினார்.
"இத்தனை காட்டுத் தீயை அணைப்பதும் இத்தனை பேரையையும் வெளியேற்றுவதும் கியூபெக் வரலாற்றிலேயே இதுவே முதன்முறை. கோடைக்காலம் முழுவதும் போராட வேண்டி இருக்கலாம்," என்றார் அவர்.
கியூபெக்கில் ஏறக்குறைய 14,000 பேர் வெளியேற்ற உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்கு அமெரிக்காவுக்கும் நியூயார்க் நகருக்கும் நேற்று முன்தினம் புகைமூட்டம் திரும்பியது.
நேற்று முன்தினம் பிற்பகலில் காற்றுத்தரம் மிதமான அளவில் இருந்தது. ஆனால், கடந்த வாரம் இருந்த அளவுக்கு அங்கு காற்றுத்தரம் மோசமாக இல்லை.
"காட்டுத் தீ அணைக்கப்படாத வரை அவற்றால் புகைமூட்டம் தொடரும்," என்றார் தேசிய வானிலை சேவை அலுவலகத்தைச் சேர்ந்த திரு டாமினிக்.