பொகோட்டா: தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் அமேசான் காட்டுப்பகுதியில் காணாமல்போய் 40 நாள்களுக்குப் பிறகு சிறுவர்கள் நால்வர் மீட்கப்பட்ட செய்தியை அறிந்து நாடே மகிழ்ச்சி அடைந்தது.
13, 9, 4 மற்றும் 1 வயதான அந்த நான்கு உடன்பிறப்புகள் விதைகள், வேர்கள், தாவரங்களைச் சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கொலம்பிய தேசிய பழங்குடியின அமைப்பைச் சேர்ந்த திரு லூயிஸ் அகோஸ்டா தெரிவித்தார்.
மே 1ஆம் தேதி நிகழ்ந்த சிறிய விமான விபத்தில் அவர்கள் உயிர் தப்பினர். ஆனால் விமானி, அவர்களின் தாயார், மற்றொரு பெரியவர் விபத்தில் உயிரிழந்தனர்.
காட்டுப்பகுதியில் வாழ அச்சிறுவர்களுக்கு பரிச்சயம் இருந்ததால் அவர்கள் எப்படியும் உயிர் பிழைத்துவிடுவர் என்று அவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.
தேடுதல் பணியில் ஈடுபட்ட திரு அகோஸ்டா, அச்சிறுவர்கள் ஆன்மீக ரீதியாக பிணைக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார்.
தேடுதல் பணியின்போது 20 நாள்களாக பழங்குடியினருடன் சேர்ந்து ராணுவ வீரர்கள் செயல்பட்டனர். அவர்கள் கைகோத்துத் தேடியதாலேயே அச்சிறுவர்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

