செய்திக்கொத்து

2 mins read
02ca2843-5591-4a9d-b0de-5282a553ca30
-

ஜோகூர் விலங்கியல் பூங்கா

ஆண்டு இறுதியில் திறப்பு

ஜோகூர்: ஜோகூரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 95 ஆண்டு பழமையான விலங்கியல் தோட்டம் இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பழமையான விலங்கியல் தோட்டம் மேம்பாட்டுப் பணிக்காக 2020இல் மூடப்பட்டது. ஜோகூர் சுல்தான் அனுமதியுடன் விரைவில் அது திறக்கப்படும் என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

ஹஜ் யாத்திரைக்குச் சென்றவர்

இதய செயலிழப்பால் மரணம்

ஜோகூர்: ஹஜ் யாத்திரை சென்ற 57 வயது மலேசிய மாது இதய செயலிழப்பு காரணமாக ஜூன் 4ஆம் தேதி மரணமடைந்தார்.

பாஹாங் ராவுப்பைச் சேர்ந்த அவர் தபுங் ஹாஜி சிகிச்சை நிலையத்தில் இறந்துவிட்டதாக மலேசிய ஹஜ் பேராளர் குழுவின் தலைவர் சையது சாலே சையது அப்துல் ரஹ்மான் கூறினார். "சவூதியின் மெக்காவில் உள்ள ஹரம் பள்ளிவாசலில் மதிய வேளை தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற்றது," என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் சொன்னார்.

மைக்ரோசாஃப்ட், கூகல் நிறுவனங்களை ஈர்க்கும் மலேசியா

கோலாலம்பூர்: மலேசியாவை உலகின் தரவு நிலையமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக மைக்ரோசாஃப்ட், கூகல் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில் அந்நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. டெஸ்லாவுக்கு அடுத்ததாக மற்ற அனைத்துலக நிறுவனங்களின் தளத்தை மலேசியாவில் அமைப்பது அதன் நோக்கமாகும்.

புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சரான ஸஃப்ருல் அப்துல் அஸிஸ், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் உலக விநியோக சங்கிலிருக்கு மலேசியா நடுநிலையாக செயல்பட முடியும் என்றார்.

ஆனால் தென்கிழக்கு ஆசியாவில் இத்தகைய நோக்கத்தில் செயல்படுவது மலேசியா மட்டும் அல்ல.

இவ்வட்டாரத்தில் உள்ள தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளும் அனைத்துலக நிறுவனங்களை ஈர்த்து வருவதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. மலேசியா மெதுவாக தரவு நிலையமாக மாறி வருவதாகவும் அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.