பேங்காக்: தாய்லாந்தில் கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவுக்கு டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாகப் பதிவாகி உள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து கடந்த மாதம் வரை 18,173 பேர் டெங்கியால் நோய்வாய்ப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இது 4.2 மடங்கு அதிகம் என்று தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாரத்துக்குச் சராசரியாக 900 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டது. இதுவரை 15 பேர் மாண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் பேங்காக்கில் ஆக மோசமான பாதிப்பு பதிவானது. ஐந்து வயது முதல் 14 வயது வரையிலான சிறார் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களை அடுத்து 15 வயது முதல் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பருவமழைக் காலம் காரணமாக ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தாய்லாந்தில் டெங்கி பாதிப்பு அதிகரிப்பது வழக்கம் என்றும் செப்டம்பர் மாதத்தில் பாதிப்பு குறையும் என்றும் அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சு கூறியது.
கொசுக்களை விரட்டும் திரவங்களைப் பயன்படுத்துவது, கட்டிலைச் சுற்றி வலை விரித்து தூங்குவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொசுக் கடிகளைத் தவிர்க்கும்படி தாய்லாந்து மக்களுக்கு அமைச்சு ஆலோசனை வழங்கியது.
இரண்டு நாள்களிலிருந்து ஏழு நாள்களுக்கு நீடிக்கும் கடுமையான காய்ச்சல், தசை வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, மழைக்காலத்தின்போது கொசு இனப்பெருக்க இடங்களை அழிக்க டெங்கி தடுப்பு இயக்கத்தில் சேர அரசு ஊழியர்களையும் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களையும் தாய்லாந்து அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

