பெய்ஜிங்: பலத்த காற்றில் சீனாவில் உள்ள உணவகம் ஒன்றின் கூரை அடித்துச் செல்லப்பட்டபோது மனதை பதறவைக்கும் காட்சிகளைக் காட்டும் காணொளி பார்ப்போரை நடுங்க வைத்துள்ளது.
சீனாவின் ஹியூபெய் மாநிலத்தின் யிசாங் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் பலர் உணவருந்திக்கொண்டிருந்தபோது திடீரென்று பலத்த காற்று வீசியது.
உணவகத்தில் இருக்கும்வரை தங்களுக்கு ஏதும் நேராது என்று வாடிக்கையாளர்களுக்கு இருந்த நம்பிக்கை நேரம் செல்லச் செல்ல கரைந்தது.
காற்றின் வலிமை அதிகரித்ததால் உணவகம் ஆட்டம் கண்டது. பதற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் கூரையை இணைக்கும் உலோகக் கம்பங்களைப் பிடித்துக்கொண்டனர். அப்போது திடீரென்று அசுர வேகத்தில் வந்த காற்று கூரையை அடித்துக்கொண்டு சென்றது.
உலோகக் கம்பங்களைப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர். உணவகம் எங்கும் அலறல் சத்தம் எதிரொலித்தது. கூரையுடன் சேர்ந்து பறந்த ஆடவர்கள் சிறிது வினாடிகள் கழித்து கீழே விழுந்ததைக் காட்டும் 16 வினாடிக் காணொளி சமூக ஊடகத்தில் காட்டுத் தீயைப் போல பரவியது. கூரையுடன் பறந்த ஆடவர் ஒருவர் அருகில் உள்ள கட்டடத்தின் கூரை மீது விழுந்தார். அவரது விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அசுர வேக காற்றில் உணவகத்தின் கூரை அடித்துச் செல்லப்பட்டது. உலோகக் கம்பங்களைப் பிடித்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் தூக்கி எறியப்பட்டனர்.
படம்: டுவிட்டர்

