கோத்தா பாரு: மலேசயாவின் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த இல்லத்தரசியான 62 வயது திருவாட்டி ரோக்கியா சமாட், 28 வயது திரு முகம்மது அமின் ஜுன்டாயிலைக் கரம்பிடித்துள்ளார்.
ஓராண்டுக் காதலுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருவாட்டி ரோக்கியாவுக்கு ஏற்கெனவே கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டபோதிலும் அதுகுறித்து சில நாள்களுக்கு முன்புதான் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்தப் பதிவை 2.4 மில்லியன் பேர் பார்த்தனர்.
"எனது கணவர் என்னைவிட வயதில் குறைந்தவர். இருப்பினும், நான் உயிருடன் உள்ளவரை அவர் என்னை நன்கு பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவே எனது கடைசி திருமணமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
எனது பிள்ளைகளுடன் வசிக்க எனக்கு விருப்பமில்லை. அவர்களது உதவியின்றி வாழ விரும்புகிறேன். அதே சமயம் எனக்கு வாழ்க்கைத் துணை தேவை. அதனால்தான் மீண்டும் திருமணம் செய்துகொண்டேன்," என்று மலேசிய நாளிதழ் ஹரியான் மெட்ரோவிடம் திருவாட்டி ரோக்கியா மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிதித்தார்.
திருவாட்டி ரோக்கியா இதற்கு முன்பு இருமுறை திருமணம் செய்துகொண்டவர்.
அவரது முதல் திருமணம் 40 ஆண்டுகள் நீடித்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருவாட்டி ரோக்கியாவும் அவரது முதல் கணவரும் பிரிந்தனர்.
2018ஆம் ஆண்டில் அவர் மியன்மார் நாட்டவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்த மண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

