தோக்கியோ: ஜப்பானில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் இருவர் மாண்டனர். ஒருவர் காயம் அடைந்தார்.
துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகிக்கப்படும் பதின்மவயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய ராணுவம் கூறியது.
அவரைச் சம்பவ இடத்திலேயே ராணுவ வீரர்கள் மடக்கிப் பிடித்து தடுத்து வைத்துள்ளதாக ஜப்பானிய காவல்துறை தெரிவித்தது.
25 வயது ராணுவ வீரரைக் கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த ராணுவ வீரரைக் கொல்லும் நோக்கில் அந்தப் பதின்மவயது வீரர் துப்பாக்கியால் சுட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ஜப்பானிய காவல்துறை கூறியது.
இந்தச் சம்பவம் ஜப்பானின் மத்தியப் பகுதியில் உள்ள ஹினோ துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
"உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி சுடும் பயிற்சி நடத்தப்பட்டது. அப்போது மூன்று வீரர்களைக் குறிவைத்து தற்காப்புப் படை வீரர் ஒருவர் சுட்டார்," என்று ஜப்பானியத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மாண்டவர்கள் இருவரும் 20 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் காயமடைந்தவர்கள் 50 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர் என்றும் ஜப்பானிய செய்தி நிறுவனமான என்எச்கே தெரிவித்தது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில் உள்ள சாலைகளைச் சுற்றி காவல்துறையினர் தடுப்பு போட்டனர்.
அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது.

