கோலாலம்பூர்: சிங்கப்பூரில் உள்ள தமது மகளையும் பேரனையும் நேரில் சென்று பார்க்க விரும்புவதாக தெரிவித்த திருவாட்டி ரோஸ்மா மன்சூர், இந்தப் பயணத்துக்காகத் தமது கடப்பிதழைத் தம்மிடம் தற்காலிகமாக திருப்பிக் கொடுக்கும்படி மலேசிய நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார்.
தமது கடப்பிழைக் கேட்டு திருவாட்டி ரோஸ்மா விண்ணப்பம் செய்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.
திருவாட்டி ரோஸ்மாவின் கணவரான முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், ஊழல் குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சூரியசக்தி தகடு தொடர்பான ஊழல் வழக்கில் திருவாட்டி ரோஸ்மா குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
தீர்ப்பை எதிர்த்து திருவாட்டி ரோஸ்மா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணை ஜூலை 11லிருந்து 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தண்டனை விதிக்கப்பட்ட பிறகு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள திருவாட்டி ரோஸ்மாவுக்கு முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது அவரது மகளுக்கு பிரசவ காலம்.
சிங்கப்பூருக்கு வர கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதியன்று அவருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மார்ச் 23ஆம் தேதி முதல் கடந்த மாதம் 5ஆம் தேதி வரை திருவாட்டி ரோஸ்மா சிங்கப்பூரில் இருந்தார்.
தமது மகளும் பேரனும் உடல்நலமின்றி இருந்ததாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

