ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆக இளைய மகனும் சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பவருமான கேசாங் பங்காரேப் மேயராகப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் எதிர்க்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் டிபோக் நகரின் மேயராவதற்கு அவர் இலக்கு கொண்டிருப்பதாக இந்தோனீசிய ஊடகம் நேற்று தெரிவித்தது.
28 வயது வர்த்தகரான திரு கேசாங்கைக் காட்டும் பதாகைகள் கடந்த மாதம் முதல்முறையாக டிபோக் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டன.
மேயர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக திரு கேசாங் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் பதாகைகளைப் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் தம்மால் கொடுக்கப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
மேயர் போட்டியில் போட்டியிட தமது குடும்பம் அனுமதி அளித்துள்ளதாக அவர் சில வாரங்கள் கழித்து டுவிட்டரில் காணொளி மூலம் தெரிவித்தார்.
டுவிட்டரில் அவரை 3.2 மில்லியன் பேர் பின்தொடர் கின்றனர்.
திரு கேசாங் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.

