வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான ரகசிய ஆவணங்களை முறையாகக் கையாளவில்லை என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது மொத்தம் 37 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை திரு டிரம்ப் மறுத்துள்ளார்.
திரு டிரம்ப்பை வெளியே விட்டால் இந்த வழக்குடன் தொடர்பான சாட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று வழக்கு விசாரணையின்போது ஆராயப்பட்டது.
அதையடுத்து, எவ்வித பயணத் தடையுமின்றி அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியினர் புரிந்த குற்றங்கள் தொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் ஜேக் ஸ்மித் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திரு டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
அரசாங்க வழக்கறிஞர்களின் இத்தகைய செயல்பாட்டினால் அமெரிக்கா வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு அதிருப்தி தெரிவித்தார்.
நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற திரு டிரம்ப், அமெரிக்கர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளுக்கு இடையே பிரபலமான உணவகம் ஒன்றுக்குச் சென்று அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கி, படம் எடுத்து, சிறிது நேரம் உரையாடினார்.
மீண்டும் அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் இலக்கு கொண்டுள்ளார்.

