ஏதென்ஸ்: தெற்கு கிரீசுக்கு அருகே மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 78 பேர் மாண்டுவிட்டனர்.
100க்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், படகில் 750 பேர் வரை இருந்திருக்கலாம் என்று உயிர் தப்பியவர்கள் சிலர் தெரிவித்தனர்.
படகில் இருந்தோரில் சுமார் 100 சிறுவர்கள் அடங்குவர் என்றும் அவர்கள் கூறினர்.
இப்படகு லிபியாவிலிருந்து இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது.
படகில் இருந்தோரில் பெரும்பாலோர் 20 வயதைத் தாண்டிய ஆடவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் கிரீஸ் எதிர்கொண்டுள்ள அகதிகள் சம்பந்தப்பட்ட ஆக மோசமான அசம்பாவிதங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்நாட்டில் மூன்று நாள்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.