லண்டன்: கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது பிரிட்டனில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் அப்போது அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் அலுவலகத்தில் பல ஒன்றுகூடல்கள் நடைபெற்றன.
இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது திரு ஜான்சன், நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
பொய் சொல்லித் திசை திருப்பியது மட்டுமன்றி, தமக்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற நோக்குடன் சிலரை அவர் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, திரு ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று பிரிட்டிஷ் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
விசாரணைக் குழு வெளியிட்டுள்ள 100 பக்கங்களைக் கொண்ட அறிக்கை, திரு ஜான்சனுக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விசாரணைக் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திரு ஜான்சன் மறுத்துள்ளார். தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்று அவர் அடித்துக்கூறுகிறார்.
மாறாக, விசாரணைக் குழு சொல்வதுதான் பொய் என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் கூறினார்.
விசாரணைக் குழு வெளியிட்ட இந்த அறிக்கையின் காரணமாக ஏற்கெனவே பிளவுபட்டு இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிலை மேலும் மோசம் அடையும் என்று கூறப்படுகிறது.
திரு ஜான்சனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளால் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
நேர்மை, நிபுணத்துவம், வெளிப்படைத்தன்மைமிக்க அரசாங்கத்தை நிலைநாட்ட அவர் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

