கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி திருவாட்டி ரோஸ்மா மன்சூருக்குத் தற்காலிகமாக அவரது கடப்பிதழ் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள தமது மகளையும் பேரன்களையும் பார்க்க தமக்கு அனுமதி வழங்கும்படி திருவாட்டி ரோஸ்மா மலேசிய நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
சூரியசக்தி தகடுகள் தொடர்பான ஊழல் வழக்கில் திருவாட்டி ரோஸ்மா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அதுதொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.
தண்டனை விதிக்கப்பட்ட பிறகு சிங்கப்பூருக்கு திருவாட்டி ரோஸ்மா வருவது இது மூன்றாவது முறையாகும்.
அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்க திருவாட்டி ரோஸ்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று அவர் மலேசிய நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் திரு ஜக்ஜீத் சிங் தெரிவித்தார்.

