கோலாலம்பூர்: சட்டவிரோத இணைய சூதாட்டக் கும்பல்களைக் குறிப்பிட்ட சில மலேசிய அரசியல்வாதிகள் பாதுகாப்பதால் இப்பிரச்சினையைக் களைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவே மலேசிய உள்துறை அமைச்சு, அரசாங்கம், காவல்துறை எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்று அவர் கூறினார்.
"சட்டவிரோத இணைய சூதாட்டம் காரணமாக சமூக, பொருளியல் அளவில் நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது. இப்படி இருக்கும்போது பணத்துக்காக எப்படி அரசியல்வாதிகளால் இத்தகைய கும்பல்களைப் பாதுகாக்க முடிகிறது?" என்று அமைச்சர் சைஃபுதீன் அதிருப்திக் குரல் எழுப்பினார்.
இந்தப் பிரச்சினைக்குச் சட்ட ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"சூதாட்டம் தொடர்பான சட்டம் 1953ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதன் பிறகு அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. யார் இதை மாற்ற வேண்டும்? நாடாளுமன்றமும் அரசியல்வாதிகளும்தான் அதை மாற்ற வேண்டும்.
"இதுகுறித்து 2019ஆம் ஆண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேவையான நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை. சூதாட்டம் தொடர்பான சட்டம் நிதி அமைச்சின் மேற்பார்வையின்கீழ் வருவதால் இதுகுறித்து பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் கலந்துரையாட இருக்கிறேன்," என்று அமைச்சர் சைஃபுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

