பெய்ஜிங்: அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயற்கை கருத்தரிப்பு உட்பட மற்ற கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான செலவுகளை பெய்ஜிங் நகராட்சி மன்றம் ஏற்க இருக்கிறது. பெய்ஜிங் நகரின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின்கீழ் மொத்தம் 16 கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்துக்குத் தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'ஐவிஎஃப்' எனப்படும் செயற்கை கருத்தரிப்புக்கு இனி அடிப்படை காப்புறுதித் திட்டத்தைத் தம்பதியர் பயன்படுத்தலாம் என்று பெய்ஜிங் நகராட்சி மருத்துவக் காப்புறுதிப் பிரிவின் துணை இயக்குநர் டு சின் தெரிவித்தார்.
கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பெருமளவில் சரிந்த நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண தம்பதியருக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளை பெய்ஜிங் வழங்குகிறது.
சீனாவின் பிறப்பு விகிதம் இவ்வாண்டு மேலும் மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

