இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற குரோவேஷியா
ரோட்டர்டேம்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு குரோவேஷியா தகுதி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், கூடுதல் நேரத்துக்குப் பிறகு நெதர்லாந்தை 4-2 எனும் கோல் கணக்கில் அது தோற்கடித்தது.
குரோவேஷியாவின் வெற்றிக்கு அதன் மத்தியத் திடல் ஆட்டக்காரர் லுகா மொட்ரிச் முக்கிய காரணமாக இருந்தார் என்று அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் சிலாட்கோ டலிச் புகழாரம் சூட்டினார்.
குரோவேஷியாவின் முதல் கோலையும் 116வது நிமிடத்தில் நான்காவது கோலையும் மொட்ரிச் பெனால்டி மூலம் போட்டார். இறுதி ஆட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதில் குரோவேஷியாவுக்கு எதிராக இத்தாலி அல்லது ஸ்பெயின் களமிறங்கும்.
ஆதங்கத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு
புதுடெல்லி: ஆந்திராவைச் சேர்ந்த சிஎஸ்கே பந்தடிப்பாளரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு, நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடருடன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண போட்டியில் தாம் வேண்டுமென்றே கழட்டிவிடப்பட்டிருக்கக்கூடும் என அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
புதிய பருவம்: ஆகஸ்ட் 11ல் பர்ன்லியுடன் மோதும் சிட்டி
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் 2023-2024 பருவத்தில் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று அதன் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது.
இரண்டாம் நிலை லீக் போட்டியிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு உயர்ந்துள்ள பர்ன்லியுடன் அது மோத இருக்கிறது.
தொடர்ந்து நான்காவது முறையாக லீக் பட்டத்தைத் தட்டிச்செல்லும் இலக்குடன் சிட்டி முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டம் பர்ன்லி குழுவின் டர்ஃப் மோர் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. பர்ன்லியின் நிர்வாகி என்கிற முறையில் சிட்டியின் முன்னாள் அணித் தலைவர் வின்செண்ட் கொம்பனி, தமது பழைய குழுவை எதிர்கொள்கிறார்.
அவர் தலைமையின்கீழ் கடந்த மார்ச் மாதம் சிட்டியுடன் மோதிய பர்ன்லி 6-0 எனும் கோல் கணக்கில் சுருண்டது.

