கியவ்: ஆப்பிரிக்க உயர்மட்ட குழு ஒன்று, அமைதி முயற்சிகளில் ஈடுபடுவதற்காக உக்ரேன் சென்றுள்ளது.
இந்த நிலையில் உக்ரேன் தலைநகர் மீது ரஷ்யா குண்டு களை வீசி தாக்கியது.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதி பேச்சு நடத்த முடியும் என்ற நம்பிக்கையோடு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமாபோசா தலைமையில் குழு புறப்பட்டது.
இந்தக் குழுவில் செனகல், ஸாம்பியா, கோமோரோஸ், எகிப்து உட்பட ஏழு நாடுகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பேசிய பிறகு இன்று அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சு நடத்தவிருக்கிறோம் என்று அமைதி குழு தெரிவித்தது.
இந்த நிலையில் குறைந்தது இரண்டு வெடிகுண்டுகள் தலைநகர் கியவ்வை உலுக்கியுள்ளன.
மத்திய கியவ்வில் இரண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்குள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அனைத்துலக பொருளியல் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முக்கிய உரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

