பிளிங்கனின் சீனப் பயணம் குறித்து அரசியல் நிபுணர்கள் கருத்து
வாஷிங்டன்/பெய்ஜிங்: சீனாவுக்கு தாம் மேற்கொள்ளும் பயணம் அந்நாட்டுடன் வெளிப்படையான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான உறவில் பெரிய அளவில் வெற்றி கிட்டும் என்று தாம் நம்பவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திரு பிளிங்கனின் சீனப் பயணம் உயர்மட்ட அரசதந்திர உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக அமையலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
இவ்வாண்டு பிப்ரவரியில், சீனாவுக்குச் செல்லவிருந்த திரு பிளிங்கனின் பயணம் அரசதந்திர பதற்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய திரு பிளிங்கன், "நீடித்து நிலைத்திருக்கும் அரசதந்திரத்துக்குப் போட்டித்தன்மை அவசியம். ஆனால், அதுவே மோதலுக்குக் காரணமாக அமைந்துவிடக்கூடாது," என்றார்.
இரு நாடுகளும் வெளிப்படையான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொள்வதால், இருதரப்பும் தங்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்திக்கொண்டு, சவால்கள் பற்றியும் தவறான கண்ணோட்டத்தைச் சரிசெய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
உலகளாவிய பொருளியல் நிலைத்தன்மை, கள்ளத்தனமான செயற்கை போதைப்பொருள், பருவநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற எல்லை தாண்டிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதிலும் திரு பிளிங்கன் கவனம் செலுத்துவார்.
இந்தப் பயணம் இன்னும் அதிகமான பரிமாற்றங்களுக்கு வழிவிடுமா என்று கேட்கப்பட்டதற்கு, "இது ஒரு முக்கியமான முதற்படி என்றாலும் செய்யப்பட வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய உள்ளன," என்றார் திரு பிளிங்கன்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்றும் நாளையும் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் உட்பட பல அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அரசதந்திரி ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
பிப்ரவரியில் அமெரிக்க வான்வெளியில் பறந்த சீனாவின் உளவு பலூன் என்று நம்பப்பட்ட ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே வெடித்த அரசியல் மோதலுக்குப் பிறகு, பிளிங்கனின் திட்டமிட்ட சீனப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

