செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
88c33c8c-fc54-4048-bfb4-be410bf9c6c4
-

உகாண்டா பள்ளி தாக்குதலில் 25 பேர் மரணம்; பலர் கடத்தப்பட்டனர்

கம்பாலா: ஐசிஸ் அமைப்புடன் தொடர்புடைய கம்பாலா போராளிகள் மேற்கு உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட துடன் பலர் கடத்தப்பட்டனர் என்று அந்நாட்டின் காவல்துறை நேற்று தெரிவித்தது.

"கடத்தப்பட்டவர்களை மீட்கவும் போராளிக் குழுவைத் துடைத்தொழிக்கவும் எங்கள் படை மும்முரமாகச் செயல் பட்டு வருகிறது என்று தற்காப்புத் துறை பேச்சாளர் ஃபிலிக்ஸ் குலாயிக்யே டுவிட்டரில் கூறினார். எத்தனை பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவிக்கவில்லை.

தாக்குதல்காரர்கள் விருங்கா தேசிய பூங்காவை நோக்கி தப்பித்துச் சென்றதாகவும் காவல்துறை கூறியது.

அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் சூறாவளி: ஒன்பது பேர் மரணம்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் புரட்டிப்போட்ட சூறாவளித் தாக்குதலில் குறைந்தது ஐவர் மாண்டுவிட்டதாகவும் அவர்களில் மூவர் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு டெக்சஸில் உள்ள நடமாடும் வீட்டுப் பூங்காவை சூறாவளி தாக்கியதால் (படம்) 75க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநிலத்தின் தீயணைப்புப் பிரிவின் தலைவர் போல் டச்சர் என்பிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோபோலை சூறாவளி தாக்கியதில், குறைந்தது நான்கு பேர் மாண்டனர் என்றும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித் தனர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டார்கள்.

தென்கொரியாவில் சீனாவின் 'ரகசிய காவல்துறை நிலையங்கள்'

சோல்: தங்கள் நாட்டில் ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீனாவின் காவல்துறை நிலையங்கள் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்கொரியா வின் தேசிய உளவுத்துறையும் காவல்துறையும் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தன. அவை தலைநகர் சோலில் மட்டுமல்லாமல், ஜெஜு தீவு உட்பட இதர மாநிலங்களில் செயல்பட்டு வருவதாகத் தாங்கள் சந்தேகப்படுவதாக அவை கூறின.

சோலின் சோங்பா வட்டாரத்தில் இயங்கும் ஒரு சீன உணவகம்தான் அதிகாரபூர்வமற்ற சீனாவின் காவல்துறை நிலையமாகச் செயல்படுகிறது என்று தென்கொரிய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. தென்கொரிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிடம் நிலவும் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு நடவடிக்கைகளைக் கண் காணிக்க இந்த ரகசிய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது.