சீனாவில் மாணவரின் உணவில் இருந்தது எலியின் தலைதான் என்பது உறுதி

1 mins read
1fbebae2-f0f7-4d7a-9716-15da1032a65d
உணவில் காணப்பட்டது எலியின் தலைதான் என்பது உறுதியாகியுள்ளது. படம்: வீபோ -

ஜியாங்ஸி: சீனாவில் அண்மையில் ஒரு பள்ளி மாணவரின் உணவில் விநோதமான ஒன்று காணப்பட்டது.

அது எலியின் தலை என்று சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் அது வாத்தின் கழுத்து என்று உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகள் தெரிவித்தன.

எனினும், உணவில் காணப்பட்டது எலியின் தலைதான் என்பது மாநில அளவில் நியமிக்கப்பட்ட செயற்குழு நடத்திய விசாரணையில் உறுதியானது.

உணவில் விநோதமான ஒன்று இருந்த காட்சியைக் கொண்ட காணொளியை ஜூன் மாதம் முதல் தேதியன்று சம்பந்தப்பட்ட மாணவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

அந்த மாணவர் ஜியாங்ஸி தொழில்துறை பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்தவர்.

கல்லூரியின் உணவகக் கடையிலிருந்து உணவை வாங்கியிருக்கிறார்.

அதில் இருந்தது வாத்தின் கழுத்துதான் என்று ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று கல்லூரி கூறியது.

உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளும் அதையே உறுதிப்படுத்தின.

எனினும், இணையத்தில் பலர் அதை நம்ப மறுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து அவர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர் விசாரணை நடத்த ஜூன் 10ஆம் தேதியன்று ஜியாங்ஸி மாநிலம், பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரைக் கொண்ட செயற்குழுவை அமைத்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உணவில் இருந்தது வாத்தின் கழுத்து அல்ல என்பதை அக்குழு சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.

அது எலியின் தலை என்றும் அடையாளம் காணப்பட்டது.

இந்தத் தவறு நேரக் காரணமாக இருந்த எல்லா தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயற்குழு குறிப்பிட்டது.