செபு சிட்டி: பிலிப்பீன்ஸில் உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. சரியான நேரத்தில் தீ எரிவது கண்டறியப்பட்டதால் கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்தக் கப்பலில் பயணிகளும் கப்பல் ஊழியர்களுமாக 132 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
'எம்வி எஸ்பெரன்ஸா ஸ்டார்' என்னும் பெயருடைய அந்தக் கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பிலிப்பீன்சின் சிகிஜோர் மாநிலத்தில் உள்ள இலிகான் சிட்டி பகுதியிலிருந்து லாஸி என்னும் இடம் நோக்கி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.
தாக்பிலரான் சிட்டி துறைமுகம் அருகே கப்பல் சென்றுகொண்டு இருந்தபோது நேற்று அதிகாலை 3.55 மணியளவில் அதன் இயந்திர அறையில் தீப்பிடித்தது.
அப்போது குழந்தைகள் உட்பட 72 பயணிகளும் 60 ஊழியர்களும் கப்பலில் இருந்தனர். தீப்பிடித்து எரிந்ததும் அவர்களில் சிலர் கடலில் குதித்து நீந்தி துறைமுகத்தை அடைந்தனர்.
எஞ்சிய அனைவரும் மீனவர்கள், மற்றொரு கப்பலின் ஊழி யர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டதாக போஹோல் மாகாண பேரிடர் அபாய மீட்புத் துறை அலுவலகத்தைச் சேர்ந்த டாக்டர் அந்தோணி டாமேலெரியோ கூறினார்.
திடீரென தீப்பிடித்தது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.