ஃபிலடெல்ஃபியா: 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதம் அறிவித்த பின் நேற்று முதன்முதலாக ஃபிலடெல்ஃபியா நகரில் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். இதன்மூலம் தொழிலாளர் சமூகத்தினரிடையே தமக்கு இருக்கும் ஆதரவை உறுதிசெய்யும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஏஎஃப்எல்-சிஐஓ என்ற 60 தொழிற்சங்கங்களை இணைத்து 12.5 மில்லியன் தொழிலாளர்களைப் பிரதிநிதிக்கும் அமைப்பு, திரு ஜோ பைடனுக்கும் துணை அதிபர் வேட்பாளரான திருவாட்டி கமலா ஹாரிசுக்கும் ஆதரவு தெரிவித்தது. அதிபர் தேர்தலில் இதுவரை இவ்வளவு விரைவாக தனது ஆதரவை ஒரு வேட்பாளருக்கு ஏஎஃப்எல்-சிஐஓ அறிவித்ததில்லை என்று கூறப்படுகிறது.
ஆரம்பகட்ட பிரசாரத்திலேயே தமக்குக் கிடைத்துள்ள இந்த ஆதரவு தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு பைடன் கூறினார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தொழிலாளர் மாநாடு, தொழிலாளர் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்வதன் மூலம் இரண்டாம் தவணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தொழிலாளர் இயக்க ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பதைக் காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்க வரலாற்றில் தொழிலாளர்களுக்கு அதிக ஆதரவு தெரிவிக்கும் அதிபராக திரு ஜோ பைடன் உருவெடுத்துள்ளார்.
அதற்கு அவர் தொழிலாளர் இயக்கம் ஒன்றுபட்டு முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகளை வலுவிழக்கச் செய்தது, சரிந்துவரும் தொழிலாளர் உறுப்பியத்தை திருத்த திரு ஜோ பைடன் மேற்கொண்டுவரும் முயற்சி போன்றவை காரணங்களாகத் தெரிவிக்கப்படுகின்றன.

