குவிட்டோ: சவப்பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த ஈக்குவடாரைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சென்ற வாரம் அவர் சவப்பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த காணொளி மிகவும் பரவலானது.
அதைத் தொடர்ந்து, பபாஹொயொ நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வலிப்பு வந்து இறந்துவிட்டதாக வட்டார சுகாதாரத்துறை தெரிவித்தது.
இதுகுறித்து அவருடைய மகன் கில்பர்ட் பார்பெரா கூறும்போது, “என் தாயார் சவப்பெட்டியில் இருந்தபோது உறவினர்கள் அவர் வேகமாக மூச்சுவிட்டதைக் கண்டனர். உடனே நாங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி ஜூன் 9ஆம் தேதி இறந்துவிட்டார்,” என்றார்.
“இம்முறை என் தாயார் உண்மையாகவே இறந்துவிட்டார். என்னுடைய வாழ்க்கை இதுபோல் இருக்காது,” என்று திரு கில்பர்ட் கூறியதாக ‘எல் யூனிவெர்சோ’ நாளிதழ் தெரிவித்தது.
முதல்முறை அவர் இறந்துவிட்டார் என்று தவறுதலாக அறிவிக்கப்பட்டது எப்படி என்பதை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஈக்குவடார் சுகாதாரத்துறை கூறியது.


